உடல் பருமன் தற்பொழுது மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதை வாசிக்கும் பலர் உடல் பருமனால் அவதிப்பட்டிருப்பீர்கள் அல்லது அவதிப்பட்டு கொண்டிருப்பீர்கள். இன்றும் கூட உடல் பருமனை குறைக்க பலவித உணவு பழக்க கட்டுப்பாடுகளையும், உடற்பயற்சி மேற்கொண்டு வருபவர்களையும் பார்க்கலாம்.
இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆய்வின் படி, வயதை பொறுத்து உடல் பருமனால் இந்தியாவில், 11.8% முதல் 31.3% மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நம்மில் பலர் உடல் பருமனை குறைக்க பல முயற்சிகளை எடுத்து, பாதியிலேயே விட்டிருப்போம். ஏனென்றால் நம்மால் கடினமான உணவு பழக்கவழக்கங்களையோ அல்லது உடற்பயற்சிகளையோ தொடர்ச்சியாக பின்பற்ற முடிவதில்லை.

நீங்கள் அதில் ஒருவரா? எளிதாக உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? உங்களுக்காகவே ஒரு முறை ஒன்று சமீபத்தில் ஒரு ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. வாருங்கள் அது என்னவென்பதை பற்றி பின்வரும் பகுதிகளில் காணலாம்.

எப்போது சாப்பிடுகிறோம் என்பது முக்கியம்
நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது மட்டும் நம் உடல் எடையை தீர்மானிப்பது இல்லை, நாம் எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் அதை தீர்மானிக்கிறது. உங்களில் பலர் நாள் முழுவதும் உணவு எடுத்துக் கொண்டே இருப்பவராக இருக்கலாம் அல்லது குறைவாக மட்டுமே உணவு எடுத்து கொள்பவராக இருப்பீர்கள். ஆனால், உடல் எடை அதிகரித்து கொண்டிருக்கும். அமெரிக்காவில் உள்ள ஊட்டச்சத்து அறிவியில் நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் நாம் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் உணவு உட்கொள்வதன் மூலம் நம் உடலிலுள்ள கொழுப்பின் அளவை வெகுவாக குறைக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் உணவு
கட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் உணவு உண்பது என்பது, நீங்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் கலோரியின் அளவை குறைப்பதோ அல்லது உங்கள் உணவு பழக்கவழக்கத்தையே முற்றிலும் மாற்றும் ஒரு முறை அல்ல. கட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் உணவு உண்பது என்பது, நீங்கள் பகலில் உணவு எடுத்துக் கொள்ளும் நேரங்களுக்கான இடைவெளியை குறைக்கும் ஒரு முறை. அதாவது, நீங்கள் காலையில் தாமதமாக சாப்பிடுவதன் மூலம் காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையேயான நேரத்தை குறைக்கலாம், அதே போல் இரவு உணவை சீக்கிரமாகவே சாப்பிடுவதன் மூலம், மதிய உணவிற்கும் இரவு உணவிற்கும் இடையேயான நேரத்தை குறைக்கலாம். அமெரிக்காவில் உள்ள சர்ரே பல்கலைக்கழகத்தில் நடந்த பத்து வார ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள், 13 தன்னார்வலர்களை இரண்டு குழுவாக பிரித்தனர். அதில் ஒரு குழுவில் உள்ள அனைவரும் தங்கள் காலை உணவை வழக்கமாக உண்ணும் நேரத்தை விட, 90 நிமிடம் தாமதமாகவும், இரவு உணவை 90 நிமிடம் முன்னதாகவும் எடுத்து கொண்டனர். மற்றொரு குழுவில் இருந்தவர்கள் தங்கள் வழக்கமான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இரண்டு குழுவிற்கும் என்ன சாப்பிடுவது என்பதில் எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. ஒரே கட்டுப்பாடு நேரம் மட்டுமே. இரு குழுவில் இருந்தவர்களின் ரத்த மாதிரிகள் 10 வாரங்களில் அவ்வப்பொழுது சோதிக்கப்பட்டது.

ஆய்வின் ஆச்சரிய முடிவு இந்த ஆய்வின் முடிவில், முதல் குழு அதாவது கட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் உணவு உட்கொண்டவர்கள், தங்கள் உண்ணும் நேரத்தில் நான்கரை மணி நேரத்தை குறைத்து இருந்தார்கள். முக்கியமாக அவர்கள் உடல் கொழுப்பின் அளவு மற்றும் அவர்கள் தினமும் எடுத்துக் கொள்ளும் கலோரியின் அளவு வெகுவாக குறைந்து காணப்பட்டது, அதுமட்டுமில்லாமல், எல்.டி.எல் கொழுப்பு போன்ற ஆபத்து தரக்கூடிய கொழுப்புகள் உடலில் கணிசமான அளவில் குறைந்தது. இரண்டாவது குழுவில் இந்த மாற்றம் ஒன்று கூட ஏற்படவில்லை. எனவே கட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் சாப்பிடுவதன் மூலம், நம்மில் பெரும்பாலோனோரின் கனவான உடல் எடை குறைப்பை சாத்தியப்படுத்திக் கொள்ளலாம்.