ஒவ்வொரு ஆண்டும் இறப்பவர்களில் 80 சதவீத மக்கள் இதய நோயால் தான் இறக்கிறார்கள், மாரடைப்பு மரணத்திற்கான முக்கிய காரணியாக இருக்கிறது.அவர்களது உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றினால் மாரடைப்பு ஏற்படுகிறது என்றாலும் போதிய அளவு விழிப்புணர்வு இல்லை என்பதும் முக்கியமான ஓர் காரணமாக பார்க்கப்படுகிறது.


நம் உடலில் சேர்கிற அதிகப்படியான கொழுப்பு இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லக்கூடிய வழித்தடங்களில் படிகிறது. இதனால் இதயத்திற்கு தேவையான ரத்தம் கிடைக்காமல் மாரடைப்பு ஏற்படுகிறது.மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருப்பது எல் டி எல் எனப்படுகிற கொழுப்பு தான். இதனை கெட்ட கொழுப்பு என்கிறார்கள். ரத்த நாளங்களில் அடைத்துக் கொண்டு ரத்த ஓட்டத்தை இது தடை செய்கிறது.

கெட்ட கொழுப்பு
பிற கொலஸ்ட்ரால் துகள்களை விட எல் டி எல் கொலஸ்ட்ராலின் அடர்த்தி அதிகமாக இருக்கும். அதனால் எளிதாக இவை ரத்த நாளங்களில் படிந்திடும், இவை ஒரு நாளிலோ அல்லது குறிப்பிட்ட குறுகிய காலத்தில் நிகழ்வது அல்ல, இப்படி கொழுப்பு படியும் வேலை உங்களது குழந்தை பருவத்திலிருந்தே துவங்கி விடுகிறது.


வெள்ளை அணுக்கள்
நம் உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் இந்த எல் டி எல் கொலஸ்ட்ராலை கிரகித்துக் கொள்ள ஆரம்பிக்கும்,அதனை டாக்ஸிக்காக மாற்றிடும்.ஆரம்பத்தில் எல் டி எல் கொலஸ்ட்ரால் மிகக்குறைந்த அளவு இருக்கும் போது எந்தப் பிரச்சனையும் தெரியாது, நாளடைவில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது வெள்ளை அணுக்களுக்கும் வேலை அதிகரிக்கிறது.