உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே வாழ்வின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். ஏனென்றால் சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். வாழ்க்கையில் எதை சாதிக்கவும் முதலில் நாம் கவனிக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்தை தான்.

கவனிங்க..


பழங்காலம் போல இல்லாமல் இயந்திரத்தை விட வேகமாக ஓடி கொண்டே இருக்கிறோம். வாழ்க்கையை நடத்த சம்பாத்தியம் முக்கியம் தான். ஆனால் அதை அனுபவிக்கவும், நம்மை சுற்றி உள்ளவர்களை மகிழ்விக்கவும் நம் உடல் நலனை காப்பது அவசியம். அதற்கு நமது உடல் பேசுவதை நாம் கவனிக்க வேண்டும். நம்மில் பலர் நம் உடல் பேசுவதை கவனிப்பதே கிடையாது.

அப்படி கவனித்தாலும் அதை பொருட்படுத்துவது கிடையாது. உடல் பேசும் மொழிகளை எப்படி கவனிப்பது, ஆரோக்கியத்திற்காக ஏங்கும் உடல் என்ன சொல்லும் என்பதை பார்க்கலாம். அடிப்படையான உணர்வுகளான பசி, தாகம், வாந்தி வருவது, வயிற்று போக்கு, ஜுரம் உள்ளிட்டவை உடலின் அடிப்படை உணர்வுகள்.

பசித்தால் புசி..


பசி வருவது என்பது இயல்பான உடல் மொழி. உடலுக்கு உணவு தேவைப்படுவதால் தான் பசிக்கிறது. ஆனால் பசி வரும் போது சாப்பிடாமல் காலம் தாழ்த்தி சாப்பிடுவது, அல்லது சாப்பிடாமலே வயிறை காய போடுவது என்பது மிக பெரிய ஆரோக்கிய சீர்கேட்டிற்கு வழி வகுக்கிறது. அல்சர் உள்ளிட்ட தீவிர நோய்கள் நம்மை அண்டாமல் இருக்க பசித்தவுடன் சிறிது நேரத்திலேயே சாப்பிட்டுவிட வேண்டும்.

தாகம் எடுத்தால்..

அதே போல தாகம் ஏற்படும் போது தண்ணீர் குடிப்பது மிக அவசியம். ஆனால் தாகம் ஏற்படும் போது தண்ணீர் அருந்தாமல் தவிர்ப்பதால், உடலில் பித்தம் சம்பந்தமான நோய்கள் குடியேறுகிறது. நீர்சத்து தேவை என்று உடல் நம்மிடம் தாகம் மூலம் உணர்த்தும் போது அதை தவறாமல் செய்து விட வேண்டும்.

ஜுரம்..

அதே போல இயற்கை மருத்துவத்தில் ஜுரம் என்பது நோயாக பார்க்கப்படுவதில்லை. அது ஒரு அறிகுறியாக தான் கூறப்படுகிறது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள நச்சுத்தன்மையை வெளியே அனுப்பவே ஜுரம் என்ற மொழியை உடல் பேசுவதாக கூறுகிறது இயற்கை மருத்துவம். அதே போல ஜுரம் அடிக்கும் சமயத்தில் உடலுக்கு ஓய்வு தேவை என்பதற்காகவே சோர்வு என்ற உணர்வை உடல் வெளிப்படுத்துகிறது.

ஜுரம் அடிக்கும் சமயத்தில் வாய் கசப்பு மற்றும் பசி இல்லாத தன்மை, அதிகம் சாப்பிட கூடாது என்பதற்காகவே வருகிறது என்று குறிப்பிடுகின்றனர் இயற்கை மருத்துவர்கள். உடலில் உள்ள சீதோஷ்ண நிலையை சமநிலைபடுத்தவும், உடலில் உள்ள நச்சை வெளியேற்றவும் வியர்வை வருகிறது. அதேசமயம் அதிகமாக வியர்வை வெளியேறுவது என்பது சரியான விஷயம் அல்ல.

தூக்கம் தாங்க முக்கியம்..

தூக்கம் என்பது நமக்கு எவ்வளவு அவசியம் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. ஆனால் பல காரணங்களால் நேரத்திற்கு தூங்குவதில்லை. சரியான உறக்கம் இல்லாவிட்டால் கல்லீரல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பல முக்கிய செயல்பாடுகளை தூக்கத்தின் போது தான் நம் உடல் செய்கிறது. எனவே தூக்கத்தை தள்ளிப்போடுவது என்பதை அறவே தவிர்க்க வேண்டும். எந்த ஒரு முக்கிய வேலையாக இருந்தாலும் அதை ஒதுக்கிவைத்து விட்டு தூங்கி விட வேண்டும்.

உலகிலேயே மிக அற்புதமான விஷயம் நம் உடலே. அது நம்மிடம் பேசும் மொழியை பெரும்பாலும் புறக்கணிக்கிறோம். இப்படி செய்வதால் தான் பல்வேறு நாள்பட்ட நோய்களின் கூடாரமாக நமது உடல் மாறி விடுகிறது என்பதை உணர்வோம்.