மெஹந்திபூர் பாலாஜி கோவில் மிகவும் பிரபலமான வழிபாட்டு தலம். ராஜஸ்தான் மாநிலத்தில் கரெளலி மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த அதிசய கோவில். இங்கிருக்கும் மூலவர் ஹனுமன் ஆவார். இந்த கோவிலின் தனித்துவம் என்பது, இங்கு நடைபெறும் விசித்திரமான பேய் விரட்டும் சடங்கு முறை ஆகும். இங்கு யாராலும் கணிக்க முடியாத மர்மமான ஒர் தெய்வீக சக்தி உள்ளது. இந்த சக்தியின் மூலம் இங்கு எல்லாவிதமான தீய சக்திகளும் விரட்டப்படுகிறது. பில்லி சூனியம் போன்ற தீய சக்திகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் இந்த கோவிலுக்கு வந்தால் விடுபடும் அதிசயம் குறித்து ஆய்வு செய்ய ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர்கள் குழுவொன்று ஆய்வும் செய்துள்ளது.

ஒரு கிராமமாக இருந்த இந்த இடம் இப்போது ஒரு நகரமாக வளர்ந்துள்ளது. காரணம் இந்த கோவில். இந்த கோவிலுக்கு உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி குவிகின்றனர். இந்த கோவில் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அழுகுரல், கூக்குரல், அபாயமான பெரும் கூச்சல், ஓ என்ற அலறல் என்று கோவிலின் ஒரு புறம் பெரு பயங்கரமான சத்தத்தை கேட்கக்கூடும். முதல் இரு பகுதியில் ஹனுமர் கோவில் மற்ற தெய்வங்களின் ஆலயம் உள்ளது. அங்குள்ள நெருப்பில் வெளியே வாங்கி வந்த கருப்பு உருண்டைகளை வீசுவதை மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த கோவிலுக்கு யாரேனும் செல்ல விரும்பினால் சில அறிவுருத்தல்கள் வழங்கப்படுகின்றன. அதாவது இந்த நகருக்குள் நுழைந்த பின் உடனடியாக எதையும் குடிக்கவோ அல்லது உண்ணவோ கூடாது. கோவிலுக்குள் பிரவேசிக்கும் போது, தேவையின்றி எந்த இடத்தையோ, அல்லது தெரியாதவர்களையோ தொடக்கூடாது. கோவிலை விட்டு வெளியே செல்கையில் கோவில் பிரசாதம் மற்றும் உண்ணும் பொருட்களை எடுத்து செல்ல கூடாது.

அது மட்டுமின்றி கோவிலை விட்டு வெளியே செல்கையிலும், இந்த ஊரை விட்டு வெளியேறும் போதும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவு பொட்டலங்களை காலியாக எடுத்து செல்ல வேண்டும். மேலும் எக்காரணம் கொண்டும் கோவிலை திரும்பி பார்க்க கூடாது. விசித்திரமான சப்தம் கேட்டால் கூட திரும்பி பார்க்க கூடாது. காரணம் யாரேனும் திரும்பினால் அதனை அங்கிருக்கும் தீய சக்திகள் அழைப்பாக ஏற்றுக்கொள்ளக்கூடுமாம். பேய் பிடித்தவர்கள் தூண்களில் மோதிக்கொள்வதும், அவர்களை சில அர்ச்சகர்கள் பாறைகளில் சங்கலிகளால் பிணைத்திருப்பதையும் காண முடியும். வேறு எங்கும் கண்டிராத பயங்கரமான காட்சிகள், அபாயமான பெருங்கூச்சல் நம்மை அச்சத்தில் கூடும் என்பதால் இங்கு செல்பவர்களுக்கு அதீத மனோபலம் தேவை என்கிறார்கள்.