இந்த கலியுகத்தில் ராமனின் தேவை மிக மிக அவசியமானது . ஆட்சி முறை பற்றி ராமாயணத்தில் ராமன் நிறைய பேசியிருக்கிறார். அதில் இருக்கின்ற நிறைய விஷயங்கள் இன்றைக்கு ஆட்சிமுறைக்கு தேவைப்படுகிறது. அயோத்யா காண்டத்தில் பரதன் ராமனை பார்க்க விரும்பும் போது, ராமன் பரதனிடம் ஆட்சி முறைக்கான நியதிகளை பற்றி வலியுறுத்துகிறார்.

1. அவநம்பிக்கை தவிர்ப்பது

எந்த பொறுப்பில் இருப்பவரும் தன் பொருப்பு சார்ந்த விஷயத்தில் அவநம்பிக்கை கொள்வது தவறு. பெற்றோர் பிள்ளையை நம்புவது போலவும் நிறுவனத்தை அதன் உரிமையாளர் நம்புவது போலவும் தேசத்தின் குடிகளை மன்னனும், மன்னனை தேசத்தின் குடிகளும் நம்ப வேண்டும்

2. பொய் தவிர்த்தல்

அவ நம்பிக்கையின் விளைவாகவே பொய் பிறக்கிறது. இதை கைவிடாவிட்டால் நிர்வாகத்திலிருப்பவர்களுக்கு பெரும் ஆபத்தை வரவழைக்கும்.

3. சினம் தவிர்ப்பது

சினம் அறிவை அழிக்கக்கூடியது இந்த சினம் ஆபத்தானது. சினத்தினாலேயே இலக்குவன் பரதன் வருவது பார்த்து ராமனோடு போரிட வருகிறான் என்று தவராஅக நினைத்துக் கொண்டான்

4. கவனசிதறல்

கவனம் சிதறுவது என்பது தேவையற்ற விஷயத்தில் கவனத்தை செலுத்தி தேவை விஷயத்தில் மனதை குவிக்கிற வாய்ப்பை கெடுத்துவிடும். இது அரசனுக்கும், அரசாங்கத்திற்கும் ஏன் மக்களுக்குமே பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

5. காலம் தாழ்த்துதல்

எந்த ஒரு செயலையும் செய்ய முடிவு செய்தவுடன் காலம் தாழ்த்தாமல் செய்து முடித்து விட வேண்டும். காலம் தாழ்த்துவதால் நமக்கு வர வேண்டிய நன்மை எதிரிக்கு சென்றுவிடும் வாய்ப்புகள் அதிகம்.

6. கற்றவர்களை இழிவுபடுத்தாமல் இருப்பது

கற்றவர்களிடம் அறிவுரை கேட்பவனே சிறந்த அரசனாக கருதப்படுகிறான். சாணக்கியரின் உபதேசத்தை கேட்டதாலேயே சந்தரகுப்த மெளரியன் ஆட்சியை பிடிக்க முடிந்தது. கிருஷ்ணனின் உபதேசத்தை கேட்காமல் இருந்திருந்தால் அர்ஜுனனால் போரில் வென்றிருக்கவே முடியாது. மாறாக கற்றவர்களை இழிவுப்படுத்தினால் அழிவிலிருந்து தப்புவது கடினம்.

7. ரகசியம் காத்தல்

அரசாங்க கடமைகளில் ரகசியம் காத்தல் மிக முக்கியமான ஒன்று. ரகசியத்தை காப்பாற்ற கூறிய புத்தியும், மனஉறுதியும் வேண்டும், ரகசியம் காப்பாற்றப்படாமல் போனால் மிகப்பெரிய ஆபத்துகள் நிகழும்.

8. கடமையுணர்வு

அரசு நடத்துகிற அரசனுக்கு பொறுப்புணர்வும், மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையின் மீதான ஆக்கறையும் நிறைய வேண்டும். ஐம்புலன்கள் போகிற போக்கில் மனதை விட்டு கடமை தவறி வாழ்கின்றவன் அரசனாகவே கருதப்பட மாட்டான்.

9. செயல்திறன்

அரசனானவனுக்கு செயல்திறன் மிக முக்கியமானதாகும். நினைத்த காரியத்தை செயல்படுத்தி அதன் முடிவான விளைவை ஏற்படுத்துகிற ஆற்றல் அரசனுக்கு முக்கியமான ஒன்று.

இவைகளெல்லாம் ராமன் தன்னை கானகத்தில் சந்திக்க வந்த பரதனுக்கு செய்த ராஜ்ய பரிபாலனத்திற்கான உபதேசங்கள் இவை. எந்தக்காலத்திற்கும் பொருந்தும் உபதேசங்கள் குறிப்பாக இந்த கலிகாலத்திற்கு தேவையான உபதேசங்கள்.