சூரியன் மற்றும் சந்திரனின் அசைவுகள் பிரபஞ்சத்தில் அதீத முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் மற்ற எந்த கிரகங்களை விடவும் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு கோள்கள் தான் பூமியின் மீது அதிக ஆதிக்கம் செலுத்துவதாக அமைந்துள்ளது. கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணமாலை மஹாதீபம் ஏற்றப்படுகிறது.

மேலும் கிருத்திகை நட்சத்திரம் கடவுள் முருகனின் ஜனன நட்சத்திரம் என்பது தனிச்சிறப்பு. அருணாச்சலேஸ்வரர் குடிகொண்டுள்ள திருவண்ணாமலை, ஒளி நிறைந்த மலை போற்றப்படும் ஸ்தலம். அங்கே ஏற்றப்படும் தீபம் ஒவ்வொறுவர் மனதிலும் விழிப்புணர்வை, ஞானத்தையும் படரவிட்டு ஒவ்வொருவர் வாழ்விலும் பெரும் வெளிச்சத்தை பரப்புகிறது. கிருத்திகை நட்சத்திரத்தில் இயற்கையாகவே ஒரு ஒளி வெள்ளம் பூமியில் படர்கிறது என்றும் அந்த ஒளியினால் ஒவ்வொறுவரின் கர்மாவையும் கரைய செய்ய இயலும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வை ஒவ்வொரு மானுடரும் தங்கள் அகக்கண்ணால் உணரும் வேளையில், அதனை புறக்கண்ணாலும் கண்டு உணர வேண்டும் என்பதற்காகவே, இந்த நுட்பமான தீபத்தை நிஜத்தில் பிரதிபலிக்கும் பொருட்டு, திருவண்ணாமலையில், மஹா தீபம் ஏற்றப்படுகிறது.

மலையில் ஏற்றப்படுகிற தீபம் ஒருவரின் ஞானத்தை மறைக்கும் அகந்தையை அழிக்க கூடியது . தீபம் என்பது உள்ளிருந்து எழும் ஒளியை குறிப்பது. அகந்தை என்பது என்ன? அகந்தை என்பது பொறாமை, பயம், அச்சம், நிலையற்ற தன்மை என அனைத்தையும் உள்ளடக்கியது. இது நம்மிடமிருந்து கரைந்து போவதென்பது அத்துனை எளிதானது அல்ல. ஆனால் இந்த மலையில் ஏற்றப்படும் தீபத்திற்கு, மனிதருக்கு மட்டுமல்ல தேவர்களின் அகந்தையை கூட அழிக்கும் பலம் உண்டு என்று கூறப்படுகிறது.

தன்னுடைய தெய்வீக ஒளியினால் பரமசிவன் இந்த மகத்துவம் வாய்ந்த கார்த்திகை மாதத்தில் தான் முருக பெருமானை தோற்றுவித்தார். தாரகன் எனும் அரக்கனால் பெரும் துயருக்கு தேவர்கள் ஆளான போது அந்த அரக்கனிடமிருந்து தேவர்களை காப்பாற்ற முருக பெருமானை சிவபெருமான் தன் ஒளியின் தாக்கத்தினால் உருவாக்கினார். பராசக்தி மற்றும் பரமேஸ்வரின் இருவரின் ஒத்திசைவில் உருவான ஒளியின் அம்சமாய் கார்த்திகேயன் தோன்றினான். சிவபெருமானின் நெற்றிகண்ணில் இருந்து புறப்பட்ட 6 ஜூவாலைகள் 6 குழந்தைகளாக தாமரையில் தவழ்ந்தன. பிரபஞ்சத்தின் தாயான பராசக்தி தன் சக்தியினால் அந்த ஆறு குழந்தைகளையும் ஒரே குழந்தையாக வார்த்தெடுத்தார். அதனாலேயே முருகனுக்கு, ஆறுமுகம் மற்றும் சண்முகன் என்ற பெயர்களும் உண்டு.

பரமசிவனின் நெற்றிகண் ஒளியிலிருந்து பிறந்தாலேயே முருகன் என்பவர் ஞானத்தின் உச்சமாக கருதப்படுகிறார். அவர் அறிவுக்கடவுள் என்றே போற்றப்படுவதன் காரணமும் அது தான். கார்த்திகை மாதத்தில், அண்ணாமலையாரையும், முருகனையும் மனதில் கொண்டு தீபத்தை உள்ளன்போடும், உள்ளுணர்வோடும் ஏற்றுகிற போது அது முக்திக்கான பாதையாக அமையும் என்பது இந்து மரபின் நம்பிக்கை.