மரணத்தை தவிர்க்க முடியுமா? முடியாதெனில் அது எவ்வாறு நிகழ வேண்டும்?

மரணம் தவிர்க்க முடியாது என்றால் ஏன் நாம் அதற்காக நம்மை தயார் செய்ய வேண்டும்? மரணம் என்பது ஒரு ஆச்சரியமான நிகழ்வு இது வாழ்வில் ஒருமுறைதான் நிகழ்கிறது. நம் வாழ்வில் ஒருமுறை மட்டுமே நிகழும் ஒரு நிகழ்வு என்றால் அது மரணம்தான். இது மனிதனை அடுத்த நிலைக்கு உயர்த்தும் ஒரு உன்னதமான தருணம். உடலைத் தாண்டி ஆன்மா வேறு இயக்க நிலைக்கு செல்லும் தருணம். அதனால் இந்த தருணத்தை எளிமையான கவலைகள் அற்ற ஒரு தருணமாக மாற்றவேண்டியது அவசியம். நாம் நம் அருகில் இருக்கும் ஒரு ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் எதை பற்றியும் யோசிக்காமல் உடனடியாக ஏதோ ஒரு வாகனத்தில் ஏறி சென்று விடுவோம். ஆனால் சில நூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு ஊரை தாண்டி செல்ல வேண்டி இருந்தால் அதற்கு நாம் ஒரு வாரத்திற்கு முன்பே தயார் செய்ய ஆரம்பித்துவிடுவோம்.

எல்லா வகையிலும் நாம் தயாராக இருப்போம். மரணத்திற்குப் பிறகும் நாம் அப்படியான பயணத்தையே உடல் கடந்து மேற் கொள்ளப் போகிறோம். பிறந்ததிலிருந்து இறப்பு வரையிலான வாழ்வு என்பது சிறியது. மரணத்திற்குப் பிறகான ஆன்மாவின் வாழ்வென்பது சொல்லில் அடங்கா அளவு பெரியது. ஆனால் இந்த சிறிய வாழ்க்கைக்கு தான் நாம் பொதுவாக தேவைக்கு மீறி சேர்த்து வைக்கிறோம். சிலர் இன்னும் மூன்று பிறப்புக்கும் சேர்த்து துணிமணிகளை வாங்கி வைத்துக்கொள்வார்கள், காலணிகள், அலங்காரப் பொருட்கள், சொத்துகள் என்று இவையெல்லாம் வாழ்வை தாண்டிய கையிருப்பாக இருக்கும்.

ஆனால் மரணத்திற்குப் பிறகான வாழ்வை வாழ்வதற்கு எந்த விதத்தில் இவர்கள் தங்களை தயாராக வைத்திருக்கிறார்கள்? மரணம் என்றால் என்ன ? என்பது பற்றிய தெளிவான அறிவு நமக்கு வேண்டும். பயமில்லாமல் விழிப்புணர்வுடன் மரணத்தை அணுகவேண்டும். விழிப்புணர்வு இருந்தால் பயம் இருக்காது மரணத்தை விழிப்புணர்வுடன், வாழ்கின்ற வாழ்வை விழிப்புணர்வுடன் வாழ்ந்திருக்க வேண்டும். இந்த அடிப்படையில் சொல்ல வேண்டுமென்றால் “விழிப்புணர்வுடன் வாழாதவர்கள் சாகிறார்கள் ” .

வாழ்வு முழுவதும் விழிப்புணர்வு இல்லாமல் இருந்து விட்டீர்களா? அப்படி என்றால் மரணிக்கும் தருவாயில் அதை முயற்சி செய்யுங்கள். எதையும் எதிர்க்க வேண்டாம் . எதையும் இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டாம். உயிருக்கும் உடலுக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இடைவெளியை மௌனமாக கவனியுங்கள். கவனம் மட்டுமே நீங்களாக இருங்கள். அப்போது மரணம் என்பது கடினமான ஒன்றாக இருக்காது. ஒரு அறையை விட்டு இயல்பாக வெளியே செல்வது போல், உயிர் உடலை விட்டு இயல்பாக சென்றுவிடும் இதை கூட நாம் கவனிக்கலாம்.