இன்றைக்கு சுற்றுச்சூழல் பராமரிப்பும் உயிர்களின் மீதான அன்பும் பெரிதும் போற்றப்படும் காலகட்டம். ஆனால் இருநூறு வருடங்களுக்கு முன்பதாக தோன்றிய அவதார புருஷரான வள்ளலார் இந்த “கருணை ” என்கிற ஒன்றை வாழ்வியலை நெறிமுறையாகவும், வழிமுறையாகவும் கொண்டிருந்தார். இவர் ராமலிங்க சுவாமிகள், ராமலிங்க அடிகள் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். பொதுவாக எல்லோரும் இவரை வள்லார் என்று அழைக்கின்றனர். இவர் அருட்பெரும் ஜோதியையே கடவுள் தன்மையாக போற்றுகிறார்.

அதாவது இறைவன் அறிவும், அன்பும், கருனையும், நிறைந்த ஜோதி வடிவில் உள்ளார் என்பது இவர் கருத்து. ஜீவகாருண்யமே வாழ்வை நடத்தும் ஆற்றலாக உள்ளது என்பது இவர்தம் கொள்கை. இதனோடு சேர்த்து அர்பணிப்பும் ஈகையும் இவரால் பெரிதும் போற்றப்படும் அம்சங்கள்.

இவர் தம்முடைய கொள்கையை சுத்த சமரச சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பின் மூலம் பரப்பினார். சாதி மத வேற்றுமைகளற்ற அன்பு வழி மார்க்கமாக இது திகழ்கிறது. மனிதர்கள், விலங்குகள் மட்டுமல்ல அதற்கும் கீழான ஜீவராசிகள் மீதும் அன்பை கடைபிடிக்கும் நெறியை இம்மார்க்கம் வலியுறுத்துகிறது. அகல் விளக்கின் ஒளிவடிவை அருட்பெரும் ஜோதியாக பாவித்து தியானம் செய்யும் வழக்கத்தை இவர் ஏற்படுத்தினார். வடலூரில் இவர் ஆரம்பித்த உணவளிக்கும் வழக்கத்தை இன்றும் இவரது கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் கடைபிடித்து வருகிறார்கள்.

வள்ளலாரை பொருத்தவரை ஜீவகாருண்யத்தை கடைபிடிப்பது என்பது இறைவனை வழிபடுவட்தற்கு சமமானது. இறைவனின் கருணையை பெருவதற்கு மற்ற எல்லா வழிகளையும் விட மேன்மையான வழி ஜீவகாருண்யமாகும்.

வடலூர் சன்மார்க சங்கம் பாவம், புண்ணியம், அருள், நற்பேரு போன்ற எல்லா ஆன்மீகம் சார்ந்த உயர்வுகளுக்கும் ஜீவகாருண்யத்தையே அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. ஒற்றை வரியில் சொல்வதென்றால் எல்லா பாவமும் ஜீவகாருண்யமற்ற தன்மையிலிருந்து பிறப்பதாகும். எல்லா புண்ணியமும் ஜீவகாருண்யத்திலிருந்து பிறப்பதாகும். ஜீவகாருண்யுமே மனிதர்களை முக்திக்கு அழைத்து செல்லும் வழியாக இருக்கிறது.

பசி போக்குதல் என்பதை “வள்ளலாரின் கொள்கை” ” மிக உறுதியாக கடைப் பிடிக்கிறது. ஏனென்றால் பசி என்பதே பூமியின் எல்லா பாவங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணமாக இருக்கிறது. பசிப்பிணியை போக்கிவிட்டால் பெரும்பான்மையான பாவத்திற்கான காரணிகளை ஒழித்துவிடலாம் என்பது வள்ளலாரின் கருத்து. ஏனென்றால் ஒரு உயிர் பசி கொண்து என்றால் முதலில் அதன் உடலும் மனமும் பலவீனப்படும் நல்லது கெட்டது பிரித்தறிய இயலாத மனநிலையில் மயக்கம் ஏற்படும், கோபம் மனஉளைச்சல் என பசி என்பது எந்த ஒரு உயிரின் நிலையையும் மயங்கச்செய்து குற்றங்களில் தள்ளிவிடும். இந்த ஒரு காரணத்தாலேயே ஜீவகாருண்யத்திற்கு பிறகு பசிப்பிணி போக்குதல் என்ற கொள்கையை வள்ளலார் தீவிரமாக கையாண்டார்.