சுயம்புவாக தோன்றிய அம்மன் ஆலயங்கள் சில உள்ளன என்றாலும் புற்றுவடிவத்தில் தோன்றிய அம்மன் புன்னைநல்லூரில் உள்ளார் . இந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது புன்னை காடாக இந்த இடம் இருந்ததால் இதற்கு பின்னாளில் இந்த பெயர் வந்தது . இங்குள்ள அம்மன் புற்று வடிவில் உள்ளதால் அபிஷேகத்திற்கு பதிலாக தைலக்காப்பு செய்யபடுகிறது . 5 வருடத்திற்கு ஒரு முறை மண்டல தைலக்காப்பு அபிஷேகம் நடைபெரும். அம்மை கண்டு அவதிப்படும் பக்தர்கள் மற்றும் தோல் நோய் கொண்டவர்கள் இங்கு வந்து தங்கி குணமாகி செல்கின்றனர் .

சோழ மன்னர்கள் தஞ்சையை ஆண்ட போது எட்டு விதமான தேவியை எட்டு திக்குகளிலும் காவலுக்கு வைத்தனர் . அதில் கீழ் தஞ்சையில் உள்ள இந்த கோயில் சிதிலமடைந்து போய் பின்னாளில் புற்றுவடிவமாகவே தோன்றியது . இந்த அம்மன் தஞ்சையை ஆண்ட அரசர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் பல அற்புதங்களை செய்துள்ளார் . இன்று வழிபாட்டிற்கு உள்ள இந்த அம்மன் சிலையை சாம்பிரானி புனுகு ஜவ்வாது சந்தனம் குங்கும பூ பச்சை கற்பூரம் அகில் போன்ற பல வித மூலிகைகளை கலந்து சுயம்புவான புற்று மண்ணோடு பிசைந்து செய்ததாகவும் இங்கு வாழ்ந்த சதாசிவ பிரம்மேந்திரர் இதை செய்ததாகவும் கூறுகிறார்கள்

இந்த அம்மனுக்கு கோடை காலத்தில் நன்றாக வேற்கிறது . அர்ச்சகர்கள் இந்த அம்மனின் முகத்தை துணியால் துடைத்து பக்தர்களுக்கு காண்பிக் கிறார்கள் . இதனால் இந்த அம்மனுக்கு முத்து மாரியம்மன் என்ற பெயர் உண்டு. கோவில் பிகாரத்தில் உள் தொட்டி வெளிதொட்டி இரண்டிலும் தண்ணீர் முழுமையாக நிரப்ப படுகிறது. இவ்வாறு தண்ணீர் நிரப்பினால் அம்மன் உஷ்ணம் தணியும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள் . இங்குள்ள புற்று மண் பக்தர்களின் உடல் மனம் சம்பந்த பட்ட எல்லா பிரச்சனைகளையும் தீர்கிறது . பிரச்சனை தீர்ந்தவர்கள் இங்குள்ள தீர்த்தமான வெல்ல குளத்தில் வெல்லம் வாங்கி போட்டுவிட்டு செல்கிறார்கள் .

வழக்கமாக ஆடி மாதம் இங்கு சிறப்பாக கொண்டாட படுகிறது ஆடி மாத கடைசி ஞாயிற்றுகிழமை இங்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. தஞ்சை சரபோஜி மன்னர் இந்த ஆலயத்தின் மண்டபத்தை கட்டியிருக்கிறார் . மாமன்னர் சிவாஜி இந்த ஆலயத்திற்கு மூன்று முறை வந்து வழிபட்டிருக்கிறார் .

வேப்ப மரத்தை தல விருட்சமாக கொண்ட இந்த புண்ணை நல்லூர் மாரியம்மன் கோயில் புற்று மண் தோல் வியாதிகளை காலங்காலமாக குணமாக்கி வருகிறது.