கோ என அழைக்கப்படும் பசு இந்தியாவில் தெய்வீக தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. ரிக் வேதம் பசுவை அமிர்தம் கொடுக்கும் ஒரு தேவதையாக உருவாகப்படுத்துகிறது. பசு என்பது எதிர்பார்பற்ற அன்பு, மன்னிப்பு, பொறுமை, தைரியம் போன்ற குணங்களை பார்ப்பவர்கள் மனதில் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. நம் சமூகத்தின் அன்றாட வாழ்வில் பசு மிக மிக அவசியமானதாக இருக்கிறது. குழந்தைகளுக்கு தாய் பாலுக்கு பதிலாக பசும்பால் கூட தரலாம் அந்த அளவிற்கு பசும்பால் உடலுக்கு எந்த கெடுதலும் செய்யாது.

பால் மட்டுமல்லாது பசுவின் சாணம் அதன் கோமியம் போன்றவை சித்த மருந்துகளுக்கும் விவசாயத்திற்கும், தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பதற்கு பயன்படுகிறது. பசு என்பது நமது சமூகத்தில் தெய்வத்திற்க்குக் நிகரான அந்தஸ்துடன் திகழ்வதற்கு காரணமே பசுவின் பொறுமை குணமும், உடல் நலம் மற்றும் பொருளாதாரத்தில் குடும்பங்களுக்கு தரும் பயனும் தான். அதனாலேயே பசு பாதுகாப்பு என்பது நம் சமூகத்தில் நமது உயிர் பாதுகாப்பிற்கு சமமாக கருதப்படுகிறது.

பகவான் கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்கி குடையாக பிடித்ததற்கு காரணமே அங்குள்ள பசுக்களையும் பசு மேய்பவர்களையும் அதை சார்ந்த மக்களையும் காப்பதற்குத்தான் என்று புராணம் கூறுகிறது. பகவான் கிருஷ்ணர் பசுவோடு நெருங்கிய தொடர்புடையவர். மேலும் பசுக்கள் பகலில் புல் மேய்ந்துவிட்டு பொழுது சாயும் நேரத்தில் வீடு திரும்பும் போது ஏற்படுத்தும் சத்தம், புழுதி போன்றவை மங்களகரமாகவும் நல்ல சகுனமாகவும் பார்க்கப்படுகிறது.

திருமண சடங்குகளுக்கு இது ஏற்றதாக கருதப்படுகிறது. மேலும் யாகங்களிலும் பூஜைகளிலும் பசுவில் இருந்து பெறப்படும் நெய் மிக அத்யாவஸ்யமானது, பலவிதமான ஹோமங்கள் நெய்யை கொண்டே நடத்தப்படுகின்றன. இந்த பசுவும் அதிலிருந்து பெறப்படும் பொருள்களும் இல்லாமல் பூஜை யாகங்கள் போன்றவை நடைபெறுவதில்லை. பசுவை தானமாக தருவதும் பசுவை பராமரிப்பதும் புண்ணியங்களின் எல்லாம் உயர்ந்த புண்ணியமாக கருதப்படுகிறது.

இந்திய புராணங்களில் முப்பது முக்கோடி தேவர்கள் உள்ளனர், இவர்கள் அனைவரும் பசுவின் உடலில் இருப்பதாக கருதப்படுகிறது, பசுவை வணங்குவதும் முப்பது முக்கோடி தேவர்களை வணங்குவதும் சமம் ஆகும். பசுவை கன்றுடன் பார்ப்பது நமக்கு பல நன்மைகளை தரும், பசுவின் படத்தை தினமும் பார்ப்பதன் மூலம் ஒருவர் வாழ்வில் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம். .