நாகை மாவட்டம் சிக்கலில் உள்ள நவநீதேஷ்வரர் கோயிலில் சிங்காரவேலர் என்ற பெயருடன் குடிகொண்டுள்ளார் . திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்வதற்கு தனது அன்னையிடம் வேல் வாங்கிய தலம் இந்த சிக்கல் . இந்த ஊரில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் பாலில் இருந்து பெறப்பட்ட வெண்ணையால் சிவலிங்கம் செய்து பூஜித்தார் . பூஜை செய்து முடித்து அந்த வெண்ணையை எடுக்க முடியாமல் போனதாலேயே இந்த ஊருக்கு சிக்கல் என பெயர் வந்தது. முன்னொறு காலத்தில் இந்த தலத்திளுள்ள குளத்தில் காமதேனு நீராடியதால் இதற்கு தேனு தீர்த்தம் என பெயர் உருவானது . இங்குள்ள சிவன் காமதேனுவின் வெண்ணையால் உருவாக்க பட்டவர் அதனால் இவருக்கு வெண்ணையப்பர் மற்றும் நவநீதேஷ்வரர் என்று பெயர் உண்டு.

இங்குள்ள தாயாருக்கு வேல் நெடுங்கன்னி என்று பெயர் . அம்மனின் 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்தை அருணகிரிநாதர் போற்றி பாடியுள்ளார். இந்த ஆலயத்தில் தான் முருகன் பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலராக வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார் . சூரனை போரில் அழிக்க திருச்செந்தூரில் பஞ்ச லிங்க தங்களை நிறுவி பூஜித்தார் . அப்போது அவர் முன் தோன்றிய சிவன் மல்லிகை வனம் எ ன்று அழைக்கப்படும் சிக்கலில் உன் அன்னை தவம் இருக்கிறாள் அங்கு சென்று சக்தியை பெற்று சூரனை வதம் செய்வாயாக என்று கூறினார்

அதன்படி முருகன் மல்லிகை வனம் சென்று தன் தாயிடம் சூரனை வதம் செய்ய அனுமதி கேட்டார் அவரும் தன் தவ வலிமையால் சக்தி வேல் ஒன்றை உருவாக்கி முருகனுக்கு அளித்தார் அதனால் இந்த அம்மன் வேல் நெடுங்கண்ணி என்று அழைக்கப்படுகிறார். இவ்வாறு பல சிறப்புகள் பெற்ற சிக்கலில் கந்த ஷஷ்டி விழா மிக விமர்சையாக நடைபெரும் . பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சிங்கார வேலர் அம்மனிடம் சக்தி வேல் வழங்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது . இதற்கு பிறகு தான் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெரும் . சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்ற சொல் வழக்கு உண்டு . சக்தி வேலின் வீரியத்தின் காரணமாக இன்றளவும் முருகனுக்கு வியர்வை வெள்ளமென பெருகுவதை காணலாம் . இங்குள்ள விநாயகர் சுந்தர விநாயகர் என்று அழைக்கபடுகிறார் . கோவவாமன பெருமாள் என்ற பெறுமாளும் இங்கு தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார் . இக்கோவில் திருவாருரில் இருந்து 18 கி.மி. தூரமும் நாகபட்டணத்தில் இருந்து 5 கி.மி. தூரத்திலும் உள்ளது .