கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, தாழக்குடி பேரூராட்சியில் புதர் மூடிய நிலையில் இருந்த பழமையான கோயிலில் இருந்த சிலைகள் மாயமாகிவிட்டதால் புதிய சிலை அமைக்க பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தவிளை ஜங்ஷன் அருகே சாலையோரம் நியாயவிலை கடை, அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், பஸ் நிறுத்த நிழற்குடை ஆகியன உள்ளன.

இதன் பின்பகுதியில் உள்ள தோப்புகளுக்கு செல்ல பாதை அமைக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. பொக்லைன் இயந்திரம் உதவியுடன் புதர்கள் அகற்றப்பட்டன. அப்போது புதர்களுக்கு இடையே பல நூறு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு கல் மண்டபம் தெரிந்தது. கல் மண்டபம் வெளியே தென்பட்ட தகவல் அறிந்து அங்கு ஏராளமான பொது மக்கள் கூடினர். அவர்கள் அந்த கல்மண்டபத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அதில் பழமையான கோயில் இருந்ததற்கான அடையாளம் இருந்தது.

அதாவது உள் மண்டபம், வெளி மண்டபம் என இரண்டு கல்மண்டபமாக அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில் வெளிமண்டபத்தின் ஒரு பகுதியில் முருகன் உருவமும், மறு பகுதியில் விநாயகர் உருவமும் புடைப்பு சிற்பமாக உள்ளது. அடுத்து உள் மண்டபத்தில் கல் பீடம் மட்டும் உள்ள நிலையில் சிலை எதுவும் இல்லாமல் இருந்தது. இந்த கோயில் கருவறையில் சிவன் சிலை இருந்திருக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

என்றாலும் இந்த கோயிலில் உள்ள சிலைகள் மாயமாகி உள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. கடத்தல்காரர்கள் சிலைகளை திருடி விற்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இந்த கோயிலுக்கு சொத்துகள் எங்கு உள்ளது,அவை ஆக்ரமிக்கப்பட்டுள்ளதா என்று தேவசம்போர்டு அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.