சித்தர்களையும், அவர்களின் ஜீவசமாதிகளையும் பற்றி அறிந்து கொள்ளலாம் இன்று பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம் பற்றி இன்று தெரிந்து கொள்ளலாம். வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழியாக வேளாங்கண்ணி செல்லும் வழியில் கிட்டத்திட்ட 5 கி.மீ தொலைவில் வடக்கு பொய்கைநல்லூர் அமைந்துள்ளது. வெளியூர்களில் இருந்து பயணிப்பவர்கள் நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு பயணிக்கும் வழியில் உள்ள பறவை என்னும் ஊரில் இருந்து திட்டத்திட்ட 3 கி.மீ தூரம் பயணம் செய்து இந்த ஊரை அடையலாம். வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர்) என்றவுடன் நம் நினைவுக்கு வருவது

நந்திநாதேஸ்வரர் திருக்கோயிலும் அதற்கு அருகேயுள்ள கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடமும் தான். சித்தர்கள் பலர் இந்த கோயிலுக்கு வந்து முக்தி பெற்றதால் இத்தலம் “சித்தாச்சிரம்” எனவும் போற்றப்படுகிறது.

கோரக்க சித்தர் இவர் இந்தியாவின் வட மாநிலங்களிலும் ,நேபாளத்திலும், தமிழகத்திலும் இலங்கையிலும் மிகப் பிரபலமானவராக திகழ்கிறார். சீனாவிலும் இவர் குறித்து சில வரலாற்று சான்றுகள் உண்டு. இவர் இந்தியாவின் வட மாநிலத்தில் பிறந்தவராக அறியப்படுகிறார். தமிழகத்தின் சதுரகிரி வரை பயணம் மேற்கொண்டு போகரின் நட்பை பெற்றதாகவும் பட்டினத்தார் காலத்துக்கு பிறகும் இவர் வாழ்ந்ததாகவும் ஒரு சில வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

பதினென் சித்தர்களில் இவர் பதினாறாவது சித்தராக உள்ளார். வட நாட்டில் “நவநாத சித்தர்” என்ற சித்தர் தொகுதியின் தலைமை சித்தராக இவரை போற்றி வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோராக்பூர் என்ற நகரின் பெயருக்கும் இவருடைய புகழுக்கும் தொடர்பு இருந்தமைக்கு அங்கிருக்கும் கோரக்கநாதர் கோயிலே சான்று. நேபாளத்தில் கோரக்கா நகருக்கு பெயர் வரக் காரணம் கோரக்கரே என கூறப்படுகிறது. இன்றளவும் தமிழகத்தில் நேபாளிகளை கூர்க்கா என்று தான் வழங்கி வருகின்றோம். சித்த மருத்துவம், யோகம், போர்க்கலை, சித்தரியல் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய கோரக்கரின் புகழ் இந்தியா முழுக்க பரவி கிடக்கின்றது.

போகரும் கோரக்கரும் பழனியில் முருகன் சிலையை (நவபாஷானத்தில் 20 வகையான உப்பு வகைகளும் 102 வகையான பச்சிலை சாற்றிலும் சேர்ந்தவை) செய்து அதனை பழனியில் தைப்பூசம் பௌர்ணமி இரவு 12 மணியளவில் நிறுவியபின் ஆசிரமத்தையும் கோவிலையும் பராமரிக்கும் வேலையை புலிப்பாணி சித்தரிடம் ஒப்படைத்துவிட்டு கோரக்கரை தனிமையில் அழைத்து தன்னை பழனியில் சமாதி வைத்த பின் நீ வடக்குப்பொய்கை நல்லூர் சென்று அங்கேயே நீ தவம் செய்து கொண்டிரு நான் என் சமாதியில் இருந்து வெளிப்பட்டு நான் அங்கு வந்து உன்னை சமாதியில் அடக்கம் செய்கிறேன் என்று போகர் கூறினார்.

அதன்படி கோரக்கர் போகரை சமாதியில் அடக்கம் செய்துவிட்டு வடக்குப்பொய்கை நல்லூர் வந்தார். அப்போது தன்னுடைய சீடர்கள் அனைவரும் மக்கள் பணிகளை மிக சிறப்பாக செய்து கொண்டிருந்தார்கள். அதைக்கண்டு மகிழ்ந்த கோரக்கர் தான் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தன்று சமாதி அடைந்து விடுவேன் என்று கூறி ஈசனை நினைத்து தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது போகர் பழனியில் உள்ள தன்னுடைய சமாதியில் இருந்து வெளிப்பட்டு தன் சீடர்களுக்கு தெரியாத வண்ணம் வடக்குப்பொய்கை நல்லூர் வந்து சேர்ந்தார். அந்த நாளில் கோரக்கரின் ஆசிரமம் விழாகோலம் பூண்டிருந்தது. கோரக்கர் சமாதிநிலை அடைவதை காண எல்லா சித்தர்களும் முனிவர்களும் ஞானிகளும் அடியார்களும் மற்றும் பக்தர்களும் அவ்வூர் மக்களும் கூடியிருந்தனர். அப்போது கோரக்கரை சமாதி அடையும் இடத்திற்கு போகர் அழைத்து வந்தார்.

அப்போது போகர் கோரக்கரை பார்த்து கலியுகம் முடியும் வரை நீ இங்கு இருந்து உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் வழங்க வேண்டும் என்று வாழ்த்து கூறினார். மேலும் எதிர்காலத்தில் நடக்க போகும் பல அதிசயங்களை பற்றியும் எடுத்துரைத்தார். அதன் பின் கோரக்கர் அன்னை பராசக்த்யின் திருவடியையும் ஈசன் திருவடியையும் தியானித்த வண்ணம் சமாதியில் இறங்கினார். அப்போது வானவர்களும் சித்தர்களும் முனிவர்களும் ரிஷிகளும் கோரக்கருக்கு வாழ்த்துக்கள் கூறி பூமாரி பொழிந்தார்கள். அப்போது அம்மையும் அப்பனும் மகான் ஸ்ரீ கோரக்கருக்கு நேரில் காட்சி அளித்தனர். போகர் அவரை சமாதியில் அடக்கம் செய்தார். அதன்பின் இருவரும் வெட்டவெளியில் சங்கமமானார்கள்.

எனவே தான் கோரக்கர் சமாதியான இடத்தில் ஈசன் திருவடிக்கு அனைத்து பூஜைகளும் நடைபெறுகின்றன. எனவே அந்த இடம் இன்றும் சிவசக்தியின் திருவருளும் மகான் ஸ்ரீ கோரக்கர் சித்தரின் குருவருளும் நிரம்பி வழிகின்றது. மகான் ஸ்ரீ கோரக்கர் நீண்ட நாள் அங்கு தங்கியிருந்தமையால் இங்கு அபரிவிதமான சக்தி உண்டு. பிரதி குருவாரம், பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் மகான் அருள் வேண்டி இரவில் பக்தர்கள் அங்கு தங்கி செல்கிறார்கள்.

அன்னக்காவடி தர்மம் தாயே!” – கோரக்கர் சமாதியில் மருந்தாகும் #அன்னம்!

நாகை வடக்கு பொய்கை நல்லூர் கோரக்கர் ஜீவ சாமதியில் நாள்தோறும், #இரவில் அடியவர்களுக்கு அன்னம் பாலிக்கும் ஒரு வித்தியாசமான சம்பிரதாயம் இங்கு பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இரவு 7 மணியளவில் ஆசிரமத்தின் தலைமைப் பூசாரி, தன் தோளில் ஓர் அன்னக் காவடியை சுமந்தபடி வடக்குப்பொய்கை நல்லூரின் வடக்கு மற்றும் தெற்கு வீதிகளில் வலம் வருவார். காவடியின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பெரிய பானைகள் உரியில் தொங்கும். பூசாரி #அன்னக்காவடி தர்மம் தாயே!” என வீட்டு வாசலில் நின்றபடி குரல் கொடுப்பார். அங்கு வசிக்கும் எல்லா குடும்பத்தினரும் அன்னக்காவடியில் பக்தி சிரத்தையுடன் அன்னம் பாலிக்கின்றனர். ‘சுத்தான்னம்’ எனப்படும் சுடுசோற்றை சுமந்து வரும் அன்னக்காவடி ஆசிரமம் சென்ற பின் கோரக்கர் சித்தருக்கு இரவு பூசை நடைபெறுகிறது. அப்போது நகரா ஒலிக்கப்படுகிறது. அதைக் கேட்ட பின்பே ஊர்மக்கள் தங்கள் இல்லங்களில் இரவு உணவு உண்ணுகின்றனர். பூசை செய்த #சுத்தான்னம் அடியவர்களுக்கு இரவு உணவாக வழங்கப்படுகிறது. இந்த இரவு உணவை உண்ணும் வாய்ப்புப் பெற்றவர்கள் #பாக்கியசாலிகள் என்கின்றனர். இதை உண்ணும் உணவாக மட்டுமின்றி பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் நம்பி வருகின்றனர், கோரக்கரின் பக்தர்கள். கர்மவினைகள் நீங்க மகான்களை வழிபடுங்கள் ! கோரக்கர் ஆசிரம முகவரி: அருள்மிகு கோரக்கச் சித்தர் ஆஸ்ரமம் வடக்குப் பொய்கை நல்லூர் நாகப்பட்டினம் மாவட்டம் 611 106 தொலைபேசி: 04365 -225229 – தகவல்கள் – ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை / நாகப்பட்டினம்