“இந்த நகரத்தின் தெருக்களில் வைரங்கள், ரூபிக்கள், முத்துக்கள், விலைமதிப்பற்ற கற்கள், துணிவகைகள் ஆரஞ்சு முதற்கொண்ட பல வகையான பழங்கள் என்று பூமியில் உள்ள அத்தனையும் இங்கு விற்கப்படுகிறது ” என்று போர்ச்சுகீசிய பயணி 1522 இல் ஹம்பி வந்தபோது எழுதிவைத்த குறிப்பு இது!! இது விஜயநகரத்தின் செழிப்பை பறைசாற்றுகிறது. இந்த விஜய நகரம் தோன்றிய வரலாறு சுவாரசியமானது. 1336 க்கு முன்னதாகவே துங்கபத்ரா நதிக்கரைக்கு வடக்கில் இருந்த வட இந்தியா முழுமையும் முகமது-பின்-துக்ளக் என்கிற சுல்தானின் கொடூரங்களைக் கண்டு நடுங்கி கிடந்தது .

பெர்ஷியா வரலாற்று ஆசிரியரான பெரிஷ்டா, துக்ளக்கை பற்றி எழுதும்போது “சுல்தானுக்கு தனது மக்கள் மீது கூட கருணையோ இரக்கமோ கொஞ்சமும் இருக்கவில்லை. அவர் தரும் தண்டனைகள் கொடூரமானவைகளாக மட்டும் இருக்கவில்லை, அது கண்மூடித்தனமானதாகவும், நியாமற்றதாகவும் இருந்தது. இறைவனின் படைப்பாகிய மனித ரத்தத்தை சிந்தப்படுவது குறித்து அவர் கொஞ்சமும் கவலை படவில்லை. இதையெல்லாம் பார்த்தால் சுல்தான் மனித இனத்தையே அழித்து விடுவார் போலிருக்கிறது ” என்று எழுதுகிறார்.

1326இல் தெற்கே படையெடுத்து வந்த துக்ளக் ராஜா ஜம்புக்தீஸ்வரரை வெற்றி கொண்டபோது தென்னிந்தியா முழுவதும் மிரட்சியில் ஆழ்ந்தது. சுல்தானின் படைகள் சென்ற இடங்களிலெல்லாம் கோவில்களை தரைமட்டமாக்கப்பட்டது. பலர் சிறை பிடிக்கப்பட்டு மதம் மாற்றம் செய்யப்பட்டனர். தோற்கடிக்கப்பட்ட ராஜாவின் படைத்தளபதிகள் ஹாக்கா மற்றும் பூக்கா இருவரும் போரில் இழந்த “அணேகண்டியை ” மீட்க சபதம் எடுத்து அவர்கள் குரு வித்யாரன்யரின் ஆசியுடன் மீண்டும் படை திரட்டி “அணேகண்டியை ” மீட்டனர். பிறகு 1336ல் விஜய நகரத்தை உருவாக்கினார். அன்று அவர்கள் உருவாக்கிய சாம்ராஜ்யம் பின்னர் வந்த 250 ஆண்டுகளுக்கு தென்னிந்தியாவை பாதுகாத்தது.

இந்த நகரம் பல சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோயில்களால் நிறைந்திருந்தது. விருபாக்க்ஷா கோயில், விட்டலா கோயில் அதன் பிரபலமான தேர் சிற்பம், பிரமாண்டமான மண்டபங்கள், புஷ்கரணி என்று அழைக்கப்படும் பெரிய குளங்கள் அணைகள், யானைகளை கட்டும் மண்டபங்கள் ராமாயணக் கதை சொல்லும் ராமர் கோயில் என்று ஒவ்வொரு இடமும் வியப்பும் ஆச்சரியமும் மிகுந்ததாக இருக்கும்.

இங்கிருக்கிற விருபாக்க்ஷா கோயில் விஜய நகரத்தை விட பழமையானது. மிக பிரமாண்டமான கோபுரத்தை உடையது இங்கு உள்ள லட்சுமிதேவியை நூற்றுக்கணக்கானோர் வழிபடுகின்றனர். கோயிலின் பிரம்மாண்டமான மண்டபங்கள் பிரசித்தி பெற்றவை இதன் தூண்கள் கிரானைட் கற்களால் ஆனவை. ஒரு மண்டபத்தில் உள்ள 100 தூண்களில் ஐம்பத்தி ஆறு தூண்கள், இசைகருவிகளிலிருந்து எழக்கூடிய இசையை எழுப்பும் தன்மஇ கொண்டவை. வரலாற்று அறிஞர் எ.எல். பாஷ்யம் சொல்வதுபோல் விஜயநகரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் இந்தியாவிலேயே நிகரில்லாதவை விஜயநகரம் என்றாலே நம் நினைவிற்கு வருவது மன்னர் கிருஷ்ணதேவராயர் தான். பண்டிகை நாட்களில் மன்னரின் எடைக்கு நிகராக தங்கம் மற்றும் வைர நகைகளை துலாபாரத்தில் வைத்து மக்களுக்கு வினியோகிப்பது அன்று வழக்கமாக இருந்தது. இங்கு பண்டிகை நாட்கள் மிக மிக விசேஷமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்படும். இந்த தகவலை கிருஷ்ண தேவராயர் காலத்தில் அங்கு வந்த பயணி அப்துல் ரசாக் தனது குறிப்பில் விவரமாக எழுதியிருக்கிறார். இங்கு அமைந்துள்ள குளம், போர்ச்சுகீசிய பொறியாளர் ஜோ டெல்லா போன்ட்டி அவர்களால் வடிவமைக்கப்பட்டது பெருமை வாய்ந்த இந்த விஜயநகரம் 4 வம்சங்களால் ஆளப்பட்டது. சங்கம் (1336 – 1485) சுளுவா (1455 -1503) துளுவ (1503- 1509) அரவிந்து (1569 -1572) குறிப்பாக கிருஷ்ணதேவராயரின் காலத்தில் இவ்விடம் புகழின் உச்சியில் இருந்தது. இந்திய வரலாற்றில் எந்த ஒரு சாம்ராஜ்யமும் தனித்து நின்று எதிர்க்க முடியாத வலிமை பெற்றிருந்த்து விஜயநகரம். அருகில் இருந்த இஸ்லாமிய அரசுகள் தனித்து எதிர்க்க இயலாமல் கூட்டாக அணி சேர்ந்தன. ஜனவரி 23 1565இல் அகமத்நகர், பேரார், பிஜாப்பூர், கோல்கொண்டா ஆகிய ஐந்து அரசுகளும் ஒன்றிணைந்து விஜய் நகரைத் தாக்கி வெற்றி கொண்டது. அதன் பிறகு இந்த நகரம் ஆறு மாதங்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டது. எழுத்தாளர் ராபர்ட் சீவல் தன்னுடைய . “தி பர்காட்டன் எம்பெயர்ர் ” என்ற பெயர் புத்தகத்தில் “செல்வச் செழிப்பிலும், உச்சத்திலும் கீர்த்தியிலும் இருந்த இந்து சாம்ராஜ்ஜியம் தோற்கடிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு நாளும் வாள்களாலும், ஆயுதங்களாலும் நகரமே இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இப்படி ஒரு அழிவு அதுவும் திடீரென்று வரும் என்று யாரும் நினைத்து பார்த்ததே இல்லை ” என்று எழுதி இருக்கிறார் வரலாறுக சுவாரஸ்யமானதாக இருப்பதோடு நமக்கு பல வாழ்வியல் பாடத்தை கற்று தருவதாகவும் இருக்கின்றன.