இந்து கோவில்களில் தேங்காய் உடைப்பது பொதுவான மரபு.குறிப்பாக பூஜையின் போது மற்றும் ஏதேனும் ஒரு விஷயத்தை,நிகழ்வை துவங்குகிற போது தேங்காய் உடைக்கப்படுகிறது. தேங்காய் உடைக்கப்பட்ட பின் அது பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.

தேங்காய் என்கிற பொருள் தூய்மையின் உருவமாக கருதப்படுவதால் அது தெய்வத்திற்கு சமர்பிக்கும் ஒரு பொருளாக ஆன்மீகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. அதனுள் இருக்கும் பரிசுத்தமான தண்ணீரும் அதன் இளங்கீற்றுகளும் யாருடைய கைகளும் படாதவாரும் தெய்வத்தை சென்றடையும் வரையில் எந்தவித கலப்படமோ, மாசுகளோ இன்றி பரிசுத்தமானதாகவே இருக்கிறது.

மேலும் தேங்காயை உடைப்பதென்பது ஆன்மீக பார்வையில் ஒருவருக்கு இருக்கும் தானென்ற ஆணவத்தை உடைக்கும் தார்பரியமாகவே கருதப்படுகிறது. எனவே தேங்காய் உடைத்து தெய்வத்திற்கு படைக்கிற போது நம்மிடம் இருக்கும் நாம் எனும் ஆணவம் உடைந்து நாம் இறைவனிடம் நம்மை முழுமையாக சரண் கொடுப்பது என்ற பொருளையும் கொண்டிருக்கிறது.

மேலும் தேங்காய் என்கிற பொருள் புனித கலசம், மங்களகரமான கும்பம் ஆகியவற்றை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. ஆன்மீகத்தில் தேங்காயின் முக்கியத்துவத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும். தேங்காயில் இருக்கும் மூன்று கண்கள் சிவனின் மூன்று கண்களை குறிக்கும் அடையாளமாகவே கருதப்படுகிறது.

இதில் மற்றொரு சுவாரஸ்ய அம்சம்ர், பெரும்பாலும் பெண்கள் தேங்காய் உடைக்க அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் பெண் என்பவள் மஹாலட்சுமியின் அம்சம். மங்களம் மற்றும் நேர்மறையின் மொத்த உருவான பெண் எதையும் உடைக்கவோ அல்லது அழிக்கவோ வேண்டாம் என்கிற ஒரு நிமித்தம் மட்டுமே.

மேலும் தேங்காயை உடைப்பதென்பது ஒருவகையான பலியாகவும் கருதப்படுகிறது. எனவே பெண்கள் ஒரு பொருளை பலிக்கொடுக்கும் செயல்முறையிலிருந்து விலகியிருக்கலாம் என்பதே மற்றொரு காரணம்.

தேங்காய் என்பது ஒரு விதையினுடைய அம்சத்திலிருப்பதாலும், அது உயிருக்கு இணையானது என்பதாலும் கருத்தரிக்க விருப்பமுள்ள மற்றும் கருவினை சுமக்கும் தன்மையுடைய பெண்கள் அதை உடைக்காமல் தவிர்த்து வந்தனர்.

தேங்காய் என்பதற்கு சமஸ்கிருதத்தில் நரிக்கெலா என்றும், புனித பழம் என்று பொருள் படும்படியாக “ஶ்ரீபழா “என்றும் அழைக்கப்படுகிறது. அல்லது கடவுளுக்கு அர்பணிக்க உகந்த பழம் என்ற அர்த்தத்தில் “மகா பழம் “என்றும் அழைக்கப்படுகிறது.

வேத புராணத்தில் இது குறித்த குறிப்புகள் பெருவாரியாக இல்லாவிடினும், காப்பியம் மற்றும் புராணங்களில் உண்டு. இந்த பழம் முதன் முதலில் இந்தோனேஷியாவில் விளைவிக்கப்பட்டு முதலாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.

தேங்காயிற்கு மருத்துவ குணங்களும் அதிகம், ஆன்மீக குணங்களும் அதிகம் என்ற வகையில் அது நம் இந்துக்களின் மரபில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது.