நாமறிந்த பல மனிதர்கள் பணத்தை ஒரு பொருளாக பாவித்து அதை அடையவேண்டும் என்று பெரு விருப்பம் கொண்டிருப்பார்கள் . பல நாட்களாக, மாதங்களாக, ஆண்டுகளாக ஏன் சிலர் தலைமுறை தலைமுறையாக கூட பணத்தை அடைய வேண்டும் என்று ஏங்கியிருப்பார்கள் ஆனால் அவர்களால் குறைந்த அளவு பணத்தை அல்லது பணத்தையே அடைய இயலாத நிலை வியாபித்திருக்கும். எப்போது பணம் நம்மிடம் வரும்? எப்போது அதை காண்போம்? நிச்சயம் ஒரு நாள் வரும் என்பது போன்ற கற்பனையிலேயே சிலர் வாழ்கின்றனர். ஆனால் நிச்சயம் பணம் அவர்களிடம் வரப்போவதில்லை.

காரணம், இது போன்ற மனிதர்களை “பணம்”வெறுக்கிறது. பணத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்திற்க்கு போதுமான வலிமை இல்லை. மாறாக பணத்தை வெறும் எண்களாக, காகிதமாக வாழ்வின் இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி செல்கிற பாதையில் ஒரு பக்க விளைவாக பணம் நிகழ்கிறது என்று நம்புபவரிடத்தில் தான் பணம் என்கிற மாயம் இயல்பாக நிகழ்கிறது.

இன்று உலகில் பெரும் பணக்காரர்கள் என்று அறியப்படுபவர்கள் யாரும் பணத்தை நேரடி இலக்ககாக கொண்டவர்கள் அல்ல. ஏனெனில் அவர்களுக்கு தெரியும் பணம் என்ற வார்த்தைக்கு வாழ்வை வெல்லும் வல்லமை இல்லை. அவர்கள் பணத்தை புறம் தள்ளி விட்டு வாழ்வில் எதை அடையவிளைந்தார்களோ அதை நோக்கி மட்டுமே பயணித்திருக்கிறார்கள். பணம் என்பது ஒரு வங்கியின் கணக்கிலோ, அலமாரிகளிலோ அல்லது பாதுகாப்பு பெட்டங்களிலோ வெறுமனே உட்கார்ந்திருக்கும் ஒரு வஸ்து அதை ஈர்க்க முயற்சித்து என்ன பயன்?? என்பதை வெற்றியாளர்கள் அறிந்திருக்கிறார்கள்.

அவர்கள் வாழ்கை நிகழ்வுகளிடமிருந்து “கற்றலை” மட்டுமே பெற்று கொள்ள விளைகிறார்கள். அதன் ஒரு உப பயனாய் பணம் அவர்களிடம் வளர்கிறது. “பணத்தை அடையவேண்டும் என்ற எண்ணத்தை துறந்திடுங்கள்… வாழ்வின் புதிய பரிமாணங்களை தேடி பிடியுங்கள், புதிய முயற்சிகளில் கால் பதியுங்கள், சிந்தனையை விரிவாக்குங்கள். வருங்காலத்தை குறித்த பாதுகாப்பின்மை காரணமாகவோ அல்லது அச்சத்தினாலோ பணத்தை மட்டுமே ஒரு வலிமையான ஆயுதம் என நம்பிவிடாதீர்கள்” என்பதே வெற்றியை வசப்படுத்திய மாமனிதர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ரகசிய யுத்தி.

பாதுகாப்பும், வலிமை, விடுதலை என அனைத்தையும் தர வல்லது பணம் என நீங்கள் நம்பினால் அது வானவில்லை விரட்டி பிடிப்பதை போன்றது. கண்கவர் வண்ணத்தை காட்டி ஈர்க்கும் ஆனால் அடையமுடியாது. புதிய முயற்சிகளில், துணிவான முடிவுகளில், சாமர்த்தியான வாய்ப்புகளில் எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி பணம் ஒரு பகுதியாய் வளரும். எனவே பணம் என்கிற வார்த்தையோடு இருக்கும் அதீத பிணைப்பை துண்டியுங்கள்…. இலக்கை நோக்கிய பயணத்தில் இயல்பாய் பெருகும் வளங்களை மகிழ்ச்சியுடன் சந்தியுங்கள்.