முதற் கடவுள் விநாயகர். வளத்தின், அறிவின், ஞானத்தின் மற்றும் ஆரோக்கியத்தின் கடவுள். அனைத்திற்கும் முதன்மையானவர் அவர். அதனாலேயே ஒரு காகிதத்தில் எழுத துவங்கும் போது துவங்கி பல்லாயிரம் கோடி முதலீட்டின் துவங்கபடும் தொழில் வரை, திருமணம் போன்ற சுப காரியங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் அவரையே முதலில் வணங்குகிறோம்.

கணபதிக்கு பல நாமங்கள் உண்டு, அதில் விநாயகர், கணபதி, கணேசன், கணநாதன், விக்னேஸ்வரன் போன்ற பல பெயர்கள் பெரும் புகழ் பெற்றவை. அவர் அவதரித்த இந்த திருநாளில் அவரை வணங்குவதால் நம்முடைய விருப்பங்களும், வேண்டுதல்களும் நிறைவேற்றப்படுகின்றன. கணபதியை மனதார வணங்கும் அவர் பக்தர்களின் பாவங்கள் பொசுங்கி போகும் என்கின்றன புராணங்கள்.

காலம் காலமாக கொண்டப்பட்டு வரும் இந்த பண்டிகையை, சமூக பண்டிகையாக மாற்றிய பெருமை திலகரையே சாரும். ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் பண்டிகை அல்ல இது. இது நம் நாட்டின், நம் சமூகத்தின் பண்டிகை. இதன் மூலம் சமூகத்திலுள்ள அனைவரும் ஒன்று கூடி நாட்டின் நன்மைக்காக, உலக மக்களின் நன்மைக்காக வணங்கி வழிபட இயலும்.

எதிர்பாரா விதமாக இந்த ஆண்டு நோய் தொற்றின் காரணமாக நாம் இதனை சில நிபந்தனைகளுடன் கொண்டாடுகிறோம். எனினும் விநாயகரை வழிபடும் உற்சாகமும், ஆனந்தமும் அனைவர் மனதிலும் நிரம்பியிருப்பது திண்ணம்.

விநாயகர் சிலையை வீடுகளில், பந்தலில் நிர்மாணித்த பின்னர் விநாயகர் குறித்த பாடல்களும், துதிகளும் பாடப்படுவது வழக்கம். விநாயகரின் அருளை பெற வேண்டுமெனில் புதன்கிழமைகளில் கொழுக்கட்டை படைத்து வழிபடலாம் என்பது நம்பிக்கை.

குறிப்பாக விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது, விநாயகருக்கு அருகம்புல்லும், எருக்கம் பூ மாலையும், துளசி, வில்வ இலைகள் மற்றும் அவருக்கு விருப்ப உணவான லட்டு மற்றும் கொழுக்கட்டைகளை படைத்து வழிபடுவதால் அவரின் அருளை நாம் ஈர்க்க முடியும். ஓம் கம் கணபதே நமஹ என்கிற மந்திரத்தை உச்சரித்து நம் அர்பணத்தை வழங்கலாம். வீடுகளில் வடகிழக்கு திசையில் விநாயகரை வைத்து வழிபடுவது மேலும் சிறப்பானதாக அமையும். இவரின் புகைப்படம் கூட மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். நம் துயர் துடைக்கும் தும்பிக்கை நாதனை, நம் அல்லலை அகற்றும் ஆனை முகனை விநாயகர் சதுர்த்தி நன்நாளில் வணங்கி தொழுதிடுவோம்! கவலைகள் தீர்ந்து களித்திருப்போம்!! அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.