உங்களுக்கு ஒரு மணி நேரம் மகிழ்ச்சி வேண்டுமெனில், ஒரு குட்டி தூக்கம் போடுங்கள். ஒரு நாள் முழுவதும் மகிழ்ச்சி வேண்டுமெனில் மீன்பிடிக்க செல்லுங்கள். ஒரு வருடத்திற்கு மகிழ்ச்சி வேண்டுமெனில் அதிர்ஷ்டத்தை தத்தெடுத்துக்கொள்ளுங்கள். வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி வேண்டுமெனில் யாருக்கேனும் உதவுங்கள். பல நூற்றாண்டுகாலமாக சிந்தனையாளர்கள் பலர் பரிந்துரைத்த மகிழ்ச்சிக்கான வழி பிறருக்கு உதவுவது.

காக்கைக்கு சோறிடுவது தொடங்கி ஒரு குழந்தை அதன் பிறந்தநாளுக்கான இனிப்பை பிறரோடு பகிர்வது போன்ற எல்லா சடங்குகளும், பழக்க வழக்கங்களும் பிறருக்கு கொடுப்பதை முன்னிலைப்படுத்தி நம் மனதில் பதியவைக்க பட்டவை தான்.

எல்லாவற்றையும் அறிவியல் பூர்வமாக அணுகும் அன்பர்கள் கூட இந்த உளவியலை உற்று நோக்கினால் இதன் பின் இருக்கும் அறிவியல் உண்மையும் உரக்க சொல்வது பிறருக்கு உதவுங்கள் என்பதை தான். அறிவியல் ரீதியாக பார்த்தால் FMRI எனும் தொழில்நுட்பத்தின் மூலம் பிறருக்கு கொடுப்பதால் நம் மூளையிலிருக்கும் சில பகுதிகள் தூண்டப்படுவதாக அறியப்பட்டுள்ளது. எனவே பிறருக்கு கொடுப்பது என்பது வெறும் நிறைவு மாத்திரம் அல்ல, ஆரோக்யமான,செழிப்பான வளமான மற்றும் அர்தமுள்ள வாழ்வாக இருப்பதற்கான தீர்வு.

தன்னுடைய சிரமத்தையும் பொருட்படுத்தாது கொடுப்பவர்கள் ஏராளம் உண்டு. சிக்கல்களை எதிர்கொள்ளாமல், சிறப்பாய் கொடுத்துதவுதற்கான சில குறிப்புகள் இங்கே…

ஆத்மார்த்தமான அன்பை கொடுங்கள்

நம்முடைய ஆத்மார்தமான அன்பே கொடுப்பதற்கான அடித்தளமாக இருக்க வேண்டும். எவ்வளவு கொடுத்தோம் என்கிற அளவீட்டை காட்டிலும் கொடுக்கப்பட்டவையில் நம் அன்பு எப்படியானது என்பதை கருத்தில் கொள்வதும் அவசியம். எனவே இந்த விழிப்பும் தெளிவும், பிறருக்கு நன்மை பயக்கும் அதே வேளையில் நமக்கும் சேர்த்தே நன்மை

நேரத்தை வழங்குங்கள்

வெறும் பொருளாக கொடுப்பதை காட்டிலும் நேரத்தை ஒதுக்கி கொடுப்பதற்கான தேவை இன்றைய சமூகத்தில் அதிகம் உண்டு. பெறுபவர்களுக்கு பணத்தை விடவும் ஒருவரின் இருப்பும், உயிர்ப்பும் மிக தேவையானதாக இருக்கிறது. நம் அனைவரிடமும் ஒரே அளவிலான பணம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஒரே அளவிலான நேரம் இருக்கிறது. .சில உதவிகள் நம் இருப்பால் மட்டுமே செய்யக்கூடியவை. அதை நம் நேரத்தை ஒதுக்கு நிறைவு கொள்வோம்.

வெளிப்படையான அமைப்புக்கு உதவுங்கள்

ஹார்ட்வேட்டின் ஆராய்சியாளர் மைக்கேல் நார்டன் அவர்களின் கணிப்பு படி, நாம் எதற்காக கொடுத்து உதவுகிறோம் என்பதை தெரிந்து கொண்டால் அது அதிக மகிழ்வை தரும் என்கிறார். சிலர், உதவி என்று கேட்கும் வெளிப்படைதன்மையற்ற அமைப்புகளுக்கு கொடுப்பதை காட்டிலும், இந்த நபருக்கு இந்த உதவி சென்று சேர்ந்தது என்ற வெளிப்படையான தகவல் அதிக மகிழ்ச்சியை அளிப்பதாக ஆய்வு சொல்கிறது

கொடுப்பதன் மதிப்புணர்ந்து உதவுங்கள்

சமயங்களில், நண்பர்கள் சிலர் உங்கள் கொடுக்கும் பண்பை அறிந்து, சில நிதி உதவிகளை கோருவார்கள். அவர்களிடம் மறுப்பு தெரிவிக்க தயங்கி செய்யப்படும் உதவிகளால் மனதிற்க்கு மகிழ்வு ஏற்படுவதில்லை என ஆய்வு தெரிவிக்கிறது. எனவே கேட்டார்கள் கொடுத்தோம், என்பதை காட்டிலும் அதற்கென நேரம் ஒதுக்கி, சிந்தித்து நம் கொடுக்கும் தன்மைக்கான மதிப்பை உணர்ந்து அதை சரியான இடத்தில் சென்று சேர்பது நம் மகிழ்வின் அடர்த்தியை கூட்டும். கொடுப்பதன் தார்பரியம்.. .பிறருக்கான உதவி அடுத்து கொடுத்தன் நிறைவு. எனவே கொடுக்கும் தன்மை அதிகரிக்கும் அதே வேளையில் நம் மகிழ்வும் நிறைவும் அதிகரித்தால் அது ஒரு சமூகத்திற்கும் பயனளிக்கும்.