தனித்துவமான கோவில்களின் வரிசையில் பெலவாடி ஶ்ரீ வீரநாராயண கோவிலுக்கு தனி இடம் உண்டு. இந்த கோவில் முப்பெரும் தெய்வங்களை மையமாக கொண்டது. கோவிலின் நடுநாயகமாக கிழக்கை நோக்கி வீற்றிருக்கிறார் ஶ்ரீ வீர நாராயணர் . வடக்கை நோக்கியவாறு ஶ்ரீ வேணுகோபலரும், தெற்கை நோக்கியவாறு ஶ்ரீ யோக நரசிம்மரும் அமையப்பெற்ற திருத்தலம் இது.

இந்த கோவில் இரண்டு முறை கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. நடுவில் இருக்கும் வளாகம் பண்டைய காலத்திலும், அதனை சுற்றியிருக்கும் அமைப்புகள் சமீபத்திலும் கட்டப்பட்டனவாம். இந்தியாவின் கர்நாடாக மாநிலத்தில் சிக்மகளூரூ மாவட்டத்தில் பெலவாடி எனும் இடத்தில் அமைந்துள்ளது ஶ்ரீ வீரநாராயணர் கோவில். போசளர் கட்டிடக்கலையை மையமாக கொண்டு கட்டப்பட்டுள்ளது இக்கோவில். இத்திருத்தலத்தை போசளப் பேரசர் இரண்டாம் வீர வல்லாளன் கிபி 1200 இல் இக்கோவிலை கட்டியுள்ளார்.

இக்கோவிலில் மூன்று தெய்வங்கள் இருப்பதால், அதாவது மூன்று கருவறை இருப்பதால் இந்த முறையை திருக்கூட பாணி என்றழைக்கிறார்கள். ஒவ்வொரு கருவரையிலும் மஹா விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரம் அமைந்துள்ளது. மிகவும் எளிமையான வீடுகளுக்கு அருகில் ஆர்பரிக்கும் அழகுடன் இப்படியொரு ஆலயமா என்று காண்பவரை வியக்க செய்கிறது இதன் அழகும், பிரமாண்டமும்.

மூன்று கருவறைகளுக்கும் மூன்று விமானங்கள் உண்டு. பிரதான நுழைவாயிலிலிருந்து ஒருவர் கோவிலுக்குள் நுழைகிற போது சாய்ந்த கூரைகளுடன் கூடிய ஒரு பெரிய நுழைவாயிலைக் காணலாம். மேலும் நாம் முன்னோக்கி செல்கையில் இரண்டு விமானங்கள் பல்வேறு சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நுழைவில் இரண்டு பிரமாண்ட யானைகள் நம்மை வரவேற்ப்பது பார்க்க மிகவும் ரம்மியமான காட்சியாக உள்ளது. இக்கோவிலெங்கும் திரும்பும் இடமெல்லாம் யானைகளின் சிற்பத்தை நாம் பெரும்பாலும் காண முடியும். இக்கோவிலின் இரண்டுசன்னதிகளுக்கிடையே 70 செவ்வக மற்றும் சதுர வடிவங்கள் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளன.

இங்குள்ள கிருஷ்ணர் விக்ரகம் மிகவும் தனித்துவமாக காளிங்கன் என்னும் பாம்பின் மீது நின்று நர்த்தனம் ஆடும் வடிவில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள வீரநாரயணரின் தோற்றம் மிகுந்த வீரம் நிறைந்த தாகவும், விக்ரகங்களின் சிரத்திற்கு பின் இருக்கும் அரை வட்ட ஒளிவடிவத்தை சிற்பக் கலையில் பிரபாவதி என்கிறார்கள். அந்த வகையில் நரசிம்மரின் தலையை சுற்றியுள்ள பிரபாவதியில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் செதுக்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது. ஆன்மீகத்தின் சாரத்தையும், கலையழகின் நுணுக்கத்தையும் ஒருவர் பார்த்து மெய்சிலிர்த்து அனுபவத்தில் உணர இதுவே சரியான கோவில்.