இந்த கட்டுரையை படித்து கொண்டிருக்கும் இச்சமயம் ஓர் கணம் நிதானித்து உங்கள் வாழ்வை திரும்பி பாருங்கள். தேவையான உணவு, உடை, இருப்பிடம் மற்ற அனைத்து அடிப்படை தேவைகள் போதுமான அளவு இருக்கின்றன. நீங்கள் செளகரியமாக இருக்கிறீர்கள். ஆனாலும் மனம் அமைதிகொள்வதில்லை எதையோ தேடி கொண்டே இருக்கிறீர்கள். நாம் வாழ்வை இந்த கோணத்தில் பெரும்பாலும் பார்பதேயில்லை. ஏதோவொரு நிறைவின்மை, தேவைக்கு மீறிய செளகரியம், அளவுக்கு மீறிய அன்பு, எதற்காக என்ற தெளிவற்ற அறிவு, உடமைபற்று, அதீத உணவு, அளப்பறியா பொழுதுபோக்கு என தேவைகளும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்து கொண்டே செல்கின்றன. போதும் என்கிற நிறைவையும் அமைதியையும் நாம் பெற விரும்புவதேயில்லை.

உச்சங்களை தொட வெற்றிகளை தட்டி பறிக்க சில நேரங்களில் செளகரியங்களை உடைத்து துணிவான சில செயல்களையும் முடிவுகளையும் எடுப்பது அவசியமாகிறது. ஆனால் நாம் நமக்கு எது தேவையோ அதை அடைய முயல்வதை காட்டிலும் நாம் எதை விரும்புகிறோமோ அதையே அடைய துடிக்கிறோம். தேவைக்கும், விருப்பத்திற்க்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை புரிந்துகொள்வதே நம்மை மேலும் பக்குவப்படுத்தும். என்று, நமக்கு எது தேவையோ அது நம்மிடமே உள்ளது என்ற தெளிவு பிறக்கிறதோ அன்று நமக்கு ருசியற்ற உணவிற்க்கு கூட நன்றி சொல்ல தோன்றும், நம்மை பேணுகிற ஒவ்வொறு உறவையும் உணர்வுபூர்வமாய் மதிக்க தோன்றும். வாழ்வின் ஒவ்வொறு தருணத்தையும் உற்சவமென கொண்டாட தோன்றும்.

நம்மோடு பயணிக்கும் மனிதர்களையும், வாழ்வின் ஒவ்வொறு கணத்தையும் ஆராதிக்கவும், மதிப்பளிக்கவும், நமக்கு நேர்கிற நன்மைகளை பிறருடன் பகிரவும் பழகுகிற பொழுது இச்சிந்தனை நம்முள் மேலும் வலு பெறும். இன்று காலை எழுந்ததற்க்கு இறைவனுக்கு நன்றி சொல்லி நாளை துவங்குங்கள். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொறுவர் நபருக்கும் உரிய மரியாதையை அல்லது ஓர் புன்சிரிப்பையேனும் பரிசளியயுங்கள். உண்ணுகிற உணவுக்கு முன்பாக சிறிய பிரார்தனை மேற்கொள்ளுங்கள். ஒவ்வொறு செயலை செய்யும் முன்பும் இதை எதற்காக செய்கிறோம் இதன் விளைவு நன்மை தானா? என்பதை தீர ஆராய்ந்து.

நற்செயல்களையே செய்யுங்கள். அச்செயலை வெற்றிகரமாக செய்தவுடன் அடுத்த வேலைக்கு அவசரமாக சென்றுவிடாமல், அச்செயலை செய்ய உதவியவர்கள், உதவியாக இருந்த உபகரணங்கள் உட்பட அனைத்திற்க்கும் நன்றி சொல்லுங்கள். ஒரு பொருளை வாங்க விளையும் முன் அது உங்களுக்கு நிச்சயம் தேவை தானா? அல்லது நீங்கள் அதை வாங்க விரும்புகிறீர்களா என்பதில் உறுதியாக இருங்கள். தேவைக்கும் விருப்பத்திற்க்குமான வித்தியாசத்தை விளங்கி கொண்டால் அது பல அற்புதங்களை அனாசியமாக நிகழ்த்தும் என்பதில் ஆச்சரியம் இல்லை.