வலியும் துயரமும் எதிர்மறையான விஷயங்கள் அல்ல. அவை நேர்மறையான உந்துசக்தி. அதனுடைய இலக்கு நம் கண்களை திறப்பித்து சரியான வழியை நம் மனதுள் புகுத்துவதே. துயரங்கள் நம் வாழ்வில் வருவது விதியினால் அல்ல… நம்மிடம் அது ஏதோவொன்றை சொல்ல விளைவதால்.

நாம் தவறான பாதையை தேர்வு செய்கிற போது… தவறான இலக்குகளை வரித்து கொள்கிற பொழுது … தவறான தேர்வுகளை தெரிவு செய்கிறபொழுது தவறான உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கிற பொழுது நாம் துயரப்படுகிறோம். அந்த துயரத்தில் நாம் மாற்று பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை நிரம்பியுள்ளது. விழிப்புணர்வுடன் இருந்தால் அந்த எச்சரிக்கையை சரியாக கிரகித்து அதை நேர்மறையாக எடுத்து கொண்டு நம் செயல்பாடுகளை, நம் குணாதிசயங்களை மாற்றி துயரத்தை எளிதாக களைய முடியும்.

எனவே வலி, வேதனை இவற்றின் உள்ளார்ந்த பண்பு நம்மை மனரீதியாக உடல் ரீதியாக துயரத்தில் ஆழ்த்துவதல்ல… நம் வாழ்வை ஏதோவொரு வழியில் மேம்படுத்துவதற்காகவே அவை ஏற்படுகின்றன. வலிகள் தரும் இந்த உன்னத செய்தியை புரிந்துகொள்ள மறுப்பவர்கள் மேலும் வேதனையில் உழல்கிறார்கள். புரிந்து கொண்டு அதை ஏற்று கொண்டு கையாள்பவர்கள் வாழ்வின் அடுத்த படிநிலைக்கு நகர்கிறார்கள்.

உலகின் ஒவ்வொறு மனிதரும் வலியை கடக்கிறார்கள் ஆனால் அதன் அளவு மட்டுமே மாறுபடுகிறது. மிகவும் வெற்றிகரமான மனிதர் என பிரகடனம் செய்யப்பட்ட உன்னத மனிதர்கள் கூட வேதனைகளை எதிர்கொண்டவர்களே அவர்கள் வெற்றிகரமானவர்கள் என்பதால் துயரங்கள் அவர்களை தொடாமல் விட்டதில்லை… அதை நேர்மறை அழைப்பாக எடுத்துகொண்டு சந்தித்து எதிர்கொண்டு தாண்டியதாலேயே அவர்கள் வெற்றிகரமான மனிதர்களாக உருமாறினார்கள்.

வேதனைகளை நமக்கு வருகிறபோது, உள்ளார்ந்து சிந்தித்து அதன் அடிப்படை காரணத்தை கண்டுணர்ந்து. இந்த வலியும் வேதனையும் நம்மை வந்தடைந்ததற்கான காரணம் என்ன, இவை நமக்கு சொல்ல வந்த செய்தியென்ன என்பதை சிந்தியுங்கள். இந்த துயரம் அடிப்படையில் எந்த மாற்றத்தை நம்முள் ஏற்ற விளைகிறது என்பதை கண்டடையுங்கள்… அது நமக்குள் நிகழ்த்த விளையும் மாற்றத்தை கண்டறிந்தால் அதை உடனே செயல்படுத்துங்கள் . எனவே ஒருபோதும் துயரங்களை இருண்மை நிறைந்த அவலமாக பார்க்காமல்…. உங்களை சரியான வழியில் வழிநடத்த சுழன்றொலிரும் வெளிச்ச பரல்களாக பாவித்து கொள்ளுங்கள்