ஏழ்மை என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்தது அல்ல. அது சிந்திக்கும் மன எண்ணங்களை பெரிதும் சார்ந்தது. வாழ்வை எந்த அடிப்படையில் எந்த அணுகுமுறையில் திட்டமிடுகிறோம் என்பதை பொருத்தது. எந்த வித உதவியுமின்றி பணக்காரர்களாக ஆன கதையும் உண்டு. அனைத்து திறமைகளும், தகுதிகளும் இருந்தும் ஆபத்துகளையும், விபரீதங்களையும் கண்டு அஞ்சி முதல் அடி எடுத்து வைக்க தயங்கியாதால் வெற்றிபெறாமல் போன கதையும் உண்டு. எனவே பணம் செய்யும் வேளையில் ஒருவர் செய்யக்கூடாத சில அடிப்படைகளை இங்கே தொகுத்துள்ளோம்…

ஒரு மனிதர் நிரந்தர வருமானத்திற்க்கு பழக்கப்பட்டுவிட்டால் அவருடைய வாழ்க்கை முறை அதற்கேற்றார் போல் தன்னை தானே வடிவமைத்து கொள்ளும். நீங்கள் ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் எதோவொரு காரணங்களுக்காக (மருத்துவம், பிள்ளைகளின் இட மாற்றம் போன்றவை) ஓய்வெடுக்க விரும்பினால். அதை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கான ஒரு தொகையை மாதாமாதம் ஒதுக்கியிருக்க வேண்டும். வெறும் சேமிப்பை மட்டுமே நம்பி நம் வேலையை நிரந்தரமாக நிறுத்தினால், அது மூன்று மாதங்களுக்கு மேல் தாக்குபிடிப்பது மிகவும் கடினம். எனவே நிரந்தர வருமானம் இருக்கும் போதே இதர வருமானம் தரக்கூடிய சொத்துக்களை உருவாக்குவது அவசியம்..

சின்ன சின்ன விஷயங்களை இலவசமாக பெற விரும்பாதீர்கள்

இலவசங்களை விரும்புவதும், நாம் வேலையிலிருந்து தப்பிக்க மற்றவர்களை வேலை செய்ய வைப்பதும் பணம் ஈட்டும் அணுகுமுறைகள் அல்ல. பணம் செய்ய தெரிந்தவருக்கு ஒருவரின் நேரத்தையும், உழைப்பையும் எவ்வாறு மதிக்க வேண்டும் என்பது தெரியும். செய்யப்பட்ட வேலைக்கான சரியான ஊதியத்தை வழங்குவது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

நேரத்தை துல்லியமாக கையாளுங்கள்

நாம் பல இடங்களில் கேட்டிருக்ககூடும் “நேரம் தான் பணம்” நாம் எத்தனை பணத்தை வேண்டுமானலும் ஈட்டி கொள்ளலாம் ஆனால் நேரத்தை ? உங்கள் அலுவலகம் ஒரு திசையிலும் உங்கள் இல்லம் வேறொரு திசையிலும் இருக்குமேயானால் நீங்கள் பணியிடத்தை சென்று சேர்வதற்கே ஒரு நாளில் 2 முதல் 3 மணி நேரத்தை வீணடித்தால் அது பணம் ஈட்டும் முறைக்கான சரியான அணுகுமுறை அல்ல.

இடத்தை முதலில் மாற்றுங்கள். மாற்றுவதற்கான சூழல் இல்லாதவர்கள் 2 மணி நேர பயணத்தை உபயோகமாக கழிக்கும் முயற்சிகளை செய்யலாம்(புதிதாக ஒரு மொழியை கற்று கொள்வது, புத்தகம் படிப்பது போன்றவை)

செலவுகளை கட்டுபடுத்துங்கள்

கடனுக்கு போன், கடனுக்கு சுற்றுலா, கடனுக்கு உடைகள், கடனுக்கு வீட்டு உபயோக பொருட்கள் என இன்று கடனுக்கு எதுவும் கிடைக்கத்துவங்கிவிட்டது. சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் துவங்கி நம் வீட்டு அனுபவஸ்தர்கள் வரை சொல்லும் அடிப்படை விதி ஒன்று தான் ஈட்டும் வருமானத்தில் 40% மேல் செலவீனங்களை வளர்த்து கொள்ளாதீர்கள். ஒருவேளை அந்த கோட்டை நீங்கள் தாண்டினால் செளகரியமான வாழ்வை நீங்கள் தியாகம் செய்ய நேரிடும். உங்கள் வருமானத்தின் அளவு உயர உயர உங்கள் தேவைகளையும் உயர்த்தி கொள்ளலாம் இந்த அடிப்படை விதியை நாம் மீறினால் நம் வாழ்வின் தரத்தை நாம் இழக்க நேரிடும்.

பணம் ஈட்டுவதற்க்கு முன்பே அவை செலவிடப்படுகின்றன

“இப்போது வாங்குங்கள் பின்பு செலுத்துங்கள்” மிக பிரபலமாக வங்கிகளால் பயன்படுத்தப்படும் வாசகம். முன்பெல்லாம் கார், வீடு போன்ற பெரிய சொத்துக்களை வாங்க மட்டுமே கடன் பெற்று வந்தனர். ஆனால் இன்று எதற்கும் எங்கும் கடன் வழங்கப்படுகிறது. 3 நிமிட கடன் என பல பளபளப்பான வாசகங்களுடன் கடன்கள் சந்தைப்படுத்தபடுகின்றன . இதன் மூலம் வருவாய் ஈட்டப்படுவதற்கு முன்பே நாம் கடன்காரர்கள் ஆகும் வாய்ப்பு அதிகம் ஏற்படுகின்றன. இப்படியொரு மறைமுக சிக்கலுக்கு எதிராக மீண்டு வந்து நாம் பணத்தை சேமித்து அதை பெருக்குவது என்பது இன்றைய தலைமுறையின் முன் விடப்பட்டுள்ள சவால்…. இதை கடந்து வருவதும் ஒரு வகை வெற்றியே..

குடும்பத்தோடு இணைந்திருங்கள்

பெரும்பாலானவர்கள் குடும்பத்தை விட்டு தனித்திருந்தால் வெற்றிகரமானவர்களாக உருவெடுக்கலாம் என தவறாக கணித்துள்ளனர் இது முற்றிலும் தவறு. ஒரு மனிதனால் குடும்பத்தின், உறவுகளின் துணையில்லாமல் வெற்றிகரமான மனிதராக மாற இயலாது. எப்போது செய்யும் வேலையில் நம்பிக்கை இழக்கிறோமோ அப்போதெல்லாம் நம்மை உயர்த்தி பிடிக்க உணர்பூர்வமான துணை அவசியம்.