இந்து கோவில்களில் பல வித்தியாசமான பூஜை முறை, சடங்குகள் பின்பற்றப்படுவது வழக்கம். குறிப்பாக சில கோவில்களில் பெண்களை அனுமதிப்பதில்லை என்று நாம் பெரும்பாலும் செய்திகளில் கேள்விப்படுகிறோம். ஆனால் சில கோவில்களில் ஆண்கள் உள்நிலைய அனுமதி மறுக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில், அஜ்மீர் பகுதியிலிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள புஸ்கர் என்ற இடத்தில் உள்ளது ஜக்த் பிதா பிரம்மா கோவில். இந்த கோவில் வளாகத்தினுள் புஸ்கர் ஏரி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கோவில் குறித்து சொல்லப்படும் தல வரலாறு யாதெனில், ஒரு முறை புஸ்கர் ஏரிக்கரையில் பிரம்மா ஒரு யாகத்தை நடத்த முற்பட்டார். அந்த யாகத்திற்கு அவருடைய துணைவியான சரஸ்வதி தேவி அவர்கள் வர தாமதமானது. இதனால் கோபமுற்ற பிரம்ம தேவர், இந்திரனிடம் தனக்கு ஏற்ற மணப்பெண்ணை கண்டறியுமாறு கூறியுள்ளார்.

அப்போது இந்திரனால் பால் விற்கும் ஒரு பெண்ணை மட்டுமே காண முடிந்தது. அவருடைய தூயத்தன்மையை உலகிற்கு உணர்த்த பசுவினுள் கடந்து வரச்செய்தனர் தேவர்களும், கடவுளர்களும். அவர் வெற்றிகரமாக பசுவினுள் கடந்து வந்ததால் அது அவருடைய இரண்டாம் பிறப்பாக கருதப்பட்டு அவர் காயத்ரி தேவி என்ற பெயர் பெற்றார். அதன் பின் பிரம்ம தேவரை மணந்த காயத்ரி பிரம்ம தேவரின் அருகில் அமர்ந்து அமிர்த கலசத்தை ஏந்தி ஆகுதி அளித்தார்.

தாமதமாக திரும்பிய சரஸ்வதி தேவி தன்னுடைய கணவரான பிரம்ம தேவரின் அருகில் மற்றொரு பெண் இருப்பதை கண்ட அவர். கடும் கோபம் கொண்டு, இனி மேல் பிரம்ம தேவரை இந்த திருத்தலம் தவிர வேரு எங்கும், யாரும் வழிபடமாட்டார்கள் என்றும் அந்த கோவில் பகுதியையும் சபித்தாராம். இதனால் இந்த கோவிலுக்குள் திருமணமான ஆண்கள் அனுமதிக்கப் படுவதில்லை . அப்படி நுழைந்தால் அவர்களின் திருமண வாழ்வு சங்கடமானதாக ஆகிவிடக்கூடும் என்பது நம்பிக்கை.

இக்கோவில் தேவ சிற்பி அவர்களால் கட்டப்பட்டதாம். யாகத்தை நடத்துவதற்கான சிறந்த இடமாக இவ்விடத்தை பிரம்ம தேவரே தேர்வு செய்திருக்கிறார். உலகில் பிரம்ம தேவருக்கென பிரத்யேகமாக அர்பணிக்கப்பட்ட ஒரே கோவில் இது தான். இந்த புஸ்கர் ஏரிக்கரையில் 500க்கும் மேற்பட்ட கோவில்கள் ஒரு காலத்தில் இருந்ததாகவும் முகாலயர்களின் காலத்தில் அவை அழிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அமாவசை, பவுர்ணமி நாளில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.